Skip to main content

 கார் லாரி மோதியதில் வங்கி ஊழியர்கள் இருவர் பலி!! 

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

Two bank employees passes away in car-truck collision

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்திலுள்ள லஷ்மி விலாஸ் வங்கியில், மதுரை கே.புதூரைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் மகன் அஜய் கார்த்திக் (31) என்பவர் 2016-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். இவர் மந்தாரக்குப்பம் பாலாஜி நகரில் மனைவி வினோதினி மற்றும் 2 வயது மகளுடன் வசித்து வந்தார். 

 

இதே வங்கியில் கங்கைகொண்டான் எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் ரகுவரன் (33) என்பவரும் 2014-ஆம் ஆண்டு முதல் அஜய் கார்த்திக்குடன் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மனைவியும், 2 வயது மகனும் உள்ளனர். ரகுவரனின் அண்ணன் ரங்கராஜன் (36) என்பவர் கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகத்தில் அரசுப் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். 

 

இந்நிலையில் அஜய் கார்த்திக், ரகுவரன், ரங்கராஜன் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் (10.02.2021) வடலூரிலிருந்து நெய்வேலிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் சேப்ளாநத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அரியலூரில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி சென்ற டாரஸ் லாரி கார் மீது மோதியது. 

 

இந்த விபத்தில் அஜய் கார்த்திக், ரகுவரன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற மந்தாரக்குப்பம் போலீஸார், காரில் சிக்கிக்கொண்ட ரங்கராஜனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

அதேசமயம் விபத்தில் பலியான ரகுவரன், அஜய் கார்த்திக் ஆகிய இருவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மந்தாரக்குப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜய் கார்த்திக், ரகுவரன் இருவரும் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்தனர். சீட் பெல்ட் அணிந்திருந்தும் காரில் ஏர்பேக் இல்லாததால் உயிரிழந்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்