Skip to main content

3 வருடம் வராத நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க? அமைச்சரையும் வேட்பாளரையும் விரட்டிய கிராமமக்கள் !!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019


 

திருச்சி எம்பி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மணிகண்டம் ஒன்றிய பகுதியில் அதிமுக கூட்டணியை சார்ந்த தேமுதிக வேட்பாளர் தர்மபுரி டாக்டர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் வளர்மதி மற்றும் கூட்டணி கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

 

வ்

மாலை நேரத்தில் முடிகண்டம், மேக்குடி, துறை குடி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளுக்குச் சென்று விட்டு பின்னர் அளுந்தூர் ஊராட்சியை சார்ந்த செவ்வந்தியாணிபட்டி என்ற கிராமத்திற்கு இரவு எட்டு மணி போல் சென்றனர்.   அப்போது அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மற்றும் அமைச்சர் ஆகியோர் ஓட்டு கேட்டு வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் அவர்களுக்காக காத்திருந்தனர்.

 

ஊருக்குள் நுழைந்த அமைச்சர் வளர்மதி காரிலிருந்து கீழே இறங்கிய உடன் திடீரென பொதுமக்கள் முற்றுகையிட்டு இங்கு கிராமத்தில் அனைவரும் கடந்த ஒரு வருடமாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.    எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளே இல்லை கஜா புயலால் செவ்வந்தியாணிப்பட்டி கிராமம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.

 

கடந்த 3 ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு அமைச்சராகி நீங்கள் ஒருமுறை கூட வரவில்லை . இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள் உங்களுக்கு நாங்கள் ஓட்டுப் போட மாட்டோம்.   அதனால் இந்த கிராமத்தை விட்டு திரும்பிச் செல்லுங்கள் என்று பொதுமக்கள் ஆவேசமாய் கூறினார்கள். கிராமத்து மக்களின் ஆவேசத்தை பார்த்த உடன் வந்த அதிமுகவினர் பொதுமக்களை அமைதிப்படுத்த முயன்றார்கள்.

 

ஆனாலும் பொதுமக்கள் தொடர்ச்சியாக அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் அவரை முற்றுகையிட முயன்றதால் அவர்களால் பொதுமக்களை அமைதிப்படுத்த முடியவில்லை.  இதையடுத்து அமைச்சர் வளர்மதி மற்றும் வேட்பாளர் ஆகியோர் இறுகிய முகத்துடன் அங்கிருந்து வெளியேறினர். திருச்சியில் முதல் முறையாக பொதுமக்கள் ஆவேசமாக அமைச்சரை திருப்பி அனுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்