பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண் நித்யானந்தா ஆசிரமத்தில் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் குருகுல ஆச்சார்யாவாகப் பணியாற்றி வந்துள்ளார். அவர் தற்போது நித்யானந்தா மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள சாரா ஸ்டீபனி லாண்ட்ரி, " நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் வெளியேறிவிட்டேன். அங்கு நடந்த சில விஷயங்கள்தான் என்னை ஆசிரமத்திலிருந்து வெளியில் வரத் தூண்டியது. நான் அங்கு தங்கியிருந்த அனைத்து நாள்களும் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன். ஆனால் அவை அனைத்தும் பொய்கள் என்று தற்போது நான் அறிந்துகொண்டேன்.
கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு ஒரு ரகசிய பணிக்காக அனுப்பப்பட்டேன். அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சந்திர மந்திரத்துடன் தங்களை இணைப்பது, மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கான பயிற்சி, ஒருவர் உடலில் இருக்கும் நோய்களைக் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்காக நான் திருவனந்தபுரம் ஆசிரமத்தில் குருகுல ஆச்சார்யாவாகச் சென்றிருந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் கணக்குகளை ஆரம்பித்து அதில் அவர்களைச் செயல்பட வைக்க வேண்டும் என்ற வேலை எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்காக தினமும் அந்தச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் என்னிடம் நெருங்கிப் பழகத்தொடங்கினர்.
ஒரு நாள் இரவு நான் என் அறையில் இருக்கும்போது இரண்டு சிறுவர்கள் என்னை வந்து சந்தித்தனர். என்னைப் பார்த்ததும் அவர்கள் அழத் தொடங்கிவிட்டனர். அப்போது அவர்கள்தான் என்னிடம் நித்யானந்தா செய்வது அனைத்தும் பொய் என்று கூறினார்கள். மேலும், ஆசிரமத்தில் உள்ளவர்களால் நாங்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறோம், கழிவறைக்குச் செல்லக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை, நாங்கள் இரும்புக் கம்பிகள் நிறைந்த அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளோம் என்று என்னிடம் தெரிவித்தனர். அவர்களின் பேச்சை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் இதைப் பற்றி நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளான ரஞ்சிதாவிடம் பேசினேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரின் உண்மையான முகம் தெரிந்த அடுத்த சில நாள்களில் நான் அங்கிருந்து கிளம்பி கனடா வந்துவிட்டேன். அந்த குழந்தைகளைக் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=XsnxFh1orY4