திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் நேற்று ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது. மே மாதம் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த முகாமில் இரண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
மைண்ட் ஜிம் என்ற பெயரில் மாணாக்கர்களின் வலது மூளை செயல் திறனை அதிகரிக்கும் பயிற்சி, தன்னம்பிக்கையுடன் தலைமை பொறுப்பேற்று குழுவாக இணைந்து செயல்படும் பயிற்சி, எக்ஸ்போஷர் டூ டிஜிட்டல் வேர்ல்ட் என்ற மற்றொரு நிகழ்வில் மாணாக்கர்களின் படிப்புத் திறன் அதிகரிக்கும் வகையில் டிஜிட்டல் லைப்ரரி மூலம் கோடிக்கணக்கான புத்தகங்களைப் பயிலும் வாய்ப்பு ஏற்படுத்துதல் ஆகியவை இந்த முகாமில் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சி முகாமில் மாணவர்கள், பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் உறுப்பினர்களான குமார் மற்றும் செல்வராஜ் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர். நேற்று (01.05.2023) ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் தலைவர் நந்தகுமார் தலைமையில் செயலாளர் கஸ்தூரிரங்கன் துவக்கி வைத்தார். உறுப்பு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்க, மீனலோசனி நன்றியுரை ஆற்றினார். பயிற்சி முகாம் முடிவு நாள் அன்று (06-05-2023) ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் உறுப்பினர் வரதராஜன் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.