திருச்சி மாநகராட்சி பகுதியில் 65 வார்டுகள் உள்ளது. கோடை காலத்தை ஒட்டி திருச்சி மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் 65 வார்டுகளிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாநகராட்சி சார்பில் காவிரி குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் 34 வார்டுகளில் குடிநீர் குழாய் செல்லும் பாதை பராமரிப்பு பணிகள்நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒரு வார காலத்தில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்தப் பணிகள் முடிந்தவுடன் 65 வார்டுகளுக்கும் தினமும் தட்டுப்பாடு இன்றி காவிரி குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தண்ணீர் வினியோகம் குறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் கூறியதாவது: திருச்சி மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 148 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்பொழுது 137 எம்.எல்.டி மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய நிலையில் உள்ளோம். 34 வார்டுகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 31 வார்டுகளில் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. எந்த விதமான முன்னுரிமையும் யாருக்கும் வழங்கப்படவில்லை. 34 வார்டுகளுக்கான குடிநீர் குழாய் செல்லும் பாதை பராமரிப்பு பணிகள் ஒரு வார காலத்தில் முடிவடைந்து விடும். 65 வார்டுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.