சென்னை நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண் கலைவாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அப்போது அவர் போலீசாரிடம் சில விசயங்களையும் கூறியுள்ளார். பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருந்த தான், பலருடன் நட்பு வைத்திருந்ததாகவும், அந்த வகையில் மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி(வயது 38) என்பவருடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. கடந்த 2½ ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் காதலித்துள்ளார்.
இருவரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவு எடுக்கின்றனர். இதனால் நேரில் சந்திக்க வேண்டும் என்பதால் கோவாவில் சந்தித்துள்ளனர். அப்போது ஆசை வார்த்தை கூறி, தனத ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார் சசிகாந்த் சிவாஜி. அதன் பின்னரும் பலமுறை பல்வேறு இடங்களில் இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
பின்னர் சசிகாந்த் சிவாஜி, தனியாக தொழில் தொடங்கினால் திருமணத்திற்கு பிறகு இரண்டு பேர் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் எனவே அதற்கு 10 லட்சம் தேவைப்படும் என்று ஆசை வார்த்தை பேசி, கலைவாணியிடம் 10 லட்சத்தை பெற்றுள்ளார். பணம் பெற்றுக்கொண்டு சென்ற சசிகாந்த் சிவாஜி, அதன் பின்னர் கலைவாணியை தொடர்புகொள்ளவே இல்லை. பேஸ்புக் தொடர்பையும் துண்டித்துவிட்டார். கோவா உள்ளிட்ட இடங்களில் இருவரும் தனியாக இருந்தபோது, சசிகாந்த் சிவாஜியின் பர்ஸ், பேக் உள்ளிட்டவற்றில் இருந்த முகவரிகளை சேகரித்து வைத்திருந்தார் கலைவாணி. அந்த முகவரிக்கு சென்று விசாரிக்கலாம் என்று கலைவாணி புனேவுக்கு சென்று சசிகாந்த் சிவாஜி பற்றி விசாரித்துள்ளார்.
அங்குதான் கலைவாணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. சசிகாந்த் சிவாஜிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதும், தன்னிடம் இருந்து ரூ.10 லட்சத்தை வாங்கி சசிகாந்த் சிவாஜி மோசடி செய்துவிட்டதும் தெரிந்து மிகப்பெரிய மனஉளைச்சலுக்கு ஆளானார்.
பின்னர் சென்னை திரும்பிய கையோடு, நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். நல்லவர் போல்தான் பழகினான். அதனால்தான் காதலித்தேன். இப்படி நாசம் பண்ணுவான்னு நான் கனவில் கூட நினைக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் புகார் அளித்தார். புகாரின் பேரில் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி ஆகியோர் உத்தரவின்பேரில் பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் மோகன்தாஸ் தலைமையில் நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், ஏட்டுகள் பாலாஜி, அல்போனஸ், மகேஸ்வரன், தினகரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் புனேவுக்கு சென்று சசிகாந்த் சிவாஜியை கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவரிம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று சமூகவலைத்தளம் மூலம் வேறு பெண்களுடன் பழகி மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.