திருச்சி மாவட்டம், புதுப்பட்டி அரண்மனை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பபிதாரோஸ். திருநங்கையான இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணிபுரிந்து வரும் கார்த்திக் என்பவர் மீது இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், ‘திருநங்கையான நான், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்க சென்றேன். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள பாலி தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் காவலராக பணிபுரிந்து வரும் கடலூர் மாவட்டம் குமராட்சி, கீழவன்னியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் மகன் கார்த்திக் (வயது 27) என்பவர் என்னுடைய செல்போன் எண்ணை கேட்டு வாங்கி அடிக்கடி என்னுடன் பேசி உரையாடி வந்தார். பின்னர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். நான் திருநங்கை என்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று மறுத்தபோது, மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். இதனை தொடர்ந்து என்னுடைய உறவினர்கள் முன்னிலையில் கடந்த ஜூலை 13ம் தேதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அதன் பிறகுதான் கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருந்தது எனக்கு தெரியவந்தது. இதுபற்றி அவரிடம் நான் கேட்டபோது எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கடந்த 11ம் தேதி வீட்டில் தூங்கிகொண்டு இருந்த என்னை கம்பியால் தாக்கி விட்டு என்னிடம் இருந்த 110 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம், ரூபாய் பணம் செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். அவர் மீது வழக்கு பதிந்து எனக்கு சொந்தமான 110 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பணம் உள்ளிட்ட பொருட்களை மீட்டுதர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறப்பு காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.