தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (06/04/2021) காலை 07.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிக்குப் பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாளை அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக தொழிலாளர் நல ஆணையம். அதன் தொடர்ச்சியாக, வெளியூர்களில் தங்கிப் பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில், தமிழக போக்குவரத்துத்துறை சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
அதன்படி, கடந்த நான்கு நாட்களில் சென்னையில் இருந்து தமிழக அரசு இயக்கிய 10,500 சிறப்பு பேருந்துகளில் 4,22,957 பயணிகள் தங்களது சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், 54,150 பயணிகள் அரசின் சிறப்பு பேருந்துகளில் வெளியூர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். நீண்டதூரம் பயணிக்கும் பயணிகள் tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.