தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கிய நிலையில், அமைதியான முறையில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "தமிழகத்தில் இன்று (06/04/2021) மாலை 05.00 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 50.05% வாக்குகள் பதிவாகியுள்ளன. டோக்கன் பெற்ற சாதாரண வாக்காளர்களும் மாலை 06.00 மணிக்கு மேல் வாக்களிக்கலாம். சாதாரண வாக்காளர்கள் வாக்களித்த பின் கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம். பொதுமக்கள் வாக்களிக்க முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். பெரிய வன்முறை குறித்த குற்றப்பதிவுகள் இதுவரை பதிவாகவில்லை" என்றார்.
இரவு 07.00 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து பிபிஇ கிட் உடையை அணிந்து வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா நோயாளிகள் வாக்களித்து வருகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் பிபிஇ கிட் உடைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 02- ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே அறிவிக்கப்படவுள்ளது.