அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், கொல்லிமலை இணைந்து இந்தியா சியாட்டில் குழு அமெரிக்கா உதவியுடன் பழங்குடியின பெண்களுக்கு 3 மாத இலவச கணினி பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற்றது.
இந்த பயிற்சித் திட்டத்திற்கு பல்கலைக்கழக முனைவர் பாலமுருகன் வரவேற்றார். கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.புவியரசன் திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில் 'கணினிகள் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இப்பயிற்சி பழங்குடியின பெண்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்க உதவும்' எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பாலமுரளிதர். பழங்குடியின கொல்லிமலை திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ், இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், காளியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்கள். முனைவர்கள் பிரவீனா, சாய் லீலா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.