"விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்" நிகழ்ச்சியில் கடந்த இரு நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கனிமொழி எம்.பி. பங்கேற்றுப் பேசி வருகிறார்.
ஒவ்வொரு கூட்டத்திலும் அங்கு திரண்டுள்ள மக்களிடம் மனுக்கள், கருத்துகளைப் பெற்ற பிறகு பேசுகிறார். அதைத் தொடர்ந்து இன்று (29/01/2021) திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் நடந்த நாடியம்மன் கோயில் திடலில், ஆலமரத்தடியில் நடந்த நிகழ்ச்சிக்கு இரவு 08.15 மணிக்கு வந்தவர் பலரது கருத்துகளைக் கேட்ட பிறகு 08.30 மணிக்கு பேசத் தொடங்கினார்.
அப்போது அவர், "நெடுவாசல் போராட்டக் களத்தில் நின்று பேசுதை பெருமையாகக் கருதுகிறேன். ஹைட்ரோ கார்பன் கொண்டு வந்து விவசாயத்தைப் பாழடிக்கிறார்கள். மத்திய ஆட்சியாளர்களுக்கு இந்த மாநில அரசும் துணை போகிறது. சோதனைக்காக எடுக்கப்பட்ட இடங்களில் கசிவுகள் வெளியேறி நிலங்களில் படிந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது. தஞ்சையில் விவசாயத்தை நாசமாக்கத் துடிக்கிறார்கள். ஆய்வுகள் நடக்கும் நேரத்திலேயே இப்படிப் பாதிப்பு என்றால் அந்தத் திட்டம் வந்தால் நெற்களஞ்சியமே காணாமல் போகும். இந்த அரசுகள் நம்மை நிர்பந்தித்து எடுக்க முயற்சிக்கிறது. அது ஒருபோதும் நடக்காது.
உணவில்லாமால் வாழ முடியுமா? கரோனா முழு ஊரடங்கில் எல்லா தொழிற்சாலைகளும் மூடியாச்சு, ஆனால் விவசாயிகள் மட்டும் வேலை செய்தார்கள். அவர்கள் நிறுத்தி இருந்தால் அனைவரும் பட்டினி தான். இது புரியாமல் விவசாயத்தையும் கார்ப்பரேட்டிடம் கொண்டுபோக வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்துட்டாங்க. என்ன விளைவிக்க வேண்டும், என்பதை விவசாயி முடிவு செய்யனும். ஆனால் யாரோ முடிவு செய்வதை விவசாயி விளைவிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
நீட் ரத்து செய்யப்பட வேண்டும். நீட் இல்லாமல் படித்த மருத்துவர்களிடம் தான் தமிழகம் நோக்கி சிகிச்சைக்காக வெளிநாட்டினரும் வருகிறார்கள். ஆனால் நீட் கொண்டு வந்து நம் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாத ஆட்சி நடக்கிறது. தி.மு.க. ஆட்சியில் நீட் ரத்தாகும்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக உள்ளார். ஆனால், இந்த மாவட்ட மக்களே கிராமங்களில் சுகாதார நிலையம் கேட்கிறீர்கள், சொந்த மாவட்டத்துக்கே இந்த நிலை என்றால், எதற்காக இந்த ஆட்சி. ரூபாய் 1,500 கோடி செலவளித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்திய அரசு தி.மு.க. மறுபடியும் வந்தவுடன் அதைச் செய்வோம். கஜா புயலில் பாதிக்கப்பட்ட போது நெடுவாசல் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தென்னங்கன்றுகள் ராணுவக் கப்பலில் வரும்னு சொன்னாங்க ஆனா வந்துச்சா? வராது. நம்ம அக்கவுண்ட்ல ரூபாய் 15 லட்சம் போட்டது போலத்தான் இதுவும்.
கல்விக்கடன் ரத்து என்று தளபதி சொல்லிட்டார், இப்ப விவசாயக்கடன் ரத்து செய்யக் கேட்கிறார்கள், விரைவில் தேர்தல் அறிக்கையில் நல்ல விஷயங்கள் நிறைய வரும். இந்த ஆட்சி யாருக்கும் நல்லது செய்யாத கெடுதல் செய்யும் ஆட்சி. தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்திருக்கும் ஆட்சி. அதனால் தான் நிராகரிக்க வேண்டும். குட்கா முறைகேடு, வேலை வாய்ப்பு, ஓ.ஏ.பி வரை எதுவும் கொடுக்காமல் இந்தப் பணம் எல்லாம் வைத்து விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் ஆட்சி இந்த ஆட்சியாக உள்ளது" என்றார்.