நற்பணி மன்றங்கள் வைத்து நலத்திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் மகாகவி பாரதி என்ற பெயரில் உருவான நற்பணி மன்றம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் நிலைத்திருக்கும் பனை வளர்க்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பாண்டிக்குடி கிராம மக்கள்.
இதுகுறித்த செய்தி நக்கீரன் இணையத்தில் வெளியிட்டிருந்த நிலையில், இன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பாண்டிக்குடி கிராமத்திற்குச் சென்று பாண்டிகுளம் ஏரியில் பல ஆயிரம் பனைமரங்கள் சூழ்ந்துள்ள பகுதியைப் பார்வையிட்டுக் கடந்த 37 வருடங்களாக பிரதிபலன் பாராமல் இத்தனை ஆயிரம் பனைமரங்களை உருக்கிய மகாகவி பாரதி நற்பணி மன்ற நிர்வாகி திருப்பதி மற்றும் நிர்வாகிகளையும் கிராம மக்களையும் பாராட்டி சால்வைகள் அணிவித்துக் கௌரவப்படுத்தினார்.
தொடர்ந்து பேசும் போது, ''ஆலங்குடி தொகுதிக்குள் சத்தமில்லாமல் தமிழ்நாட்டின் மரமான இத்தனை ஆயிரம் பனை மரங்களை உருவாக்கிய பாரதி மன்றத்தையும் பாண்டிக்குடி கிராம மக்களையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன். மரபணு மாற்றப்படாத மாற்ற முடியாத பனை மரங்களை வளர்த்திருக்கிறார்கள். இதைப் பனை பூங்கா என்று கூறலாம். இவர்களுக்கு விருது கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்புக்கூட்ட இப்பகுதி மக்களுக்குப் பயிற்சியும் அதற்கான உதவிகளையும் செய்வோம். இங்கிருந்து இன்று பல லட்சம் பனை விதைகள் சேகரிக்கலாம். சேகரிக்கப்படும் விதைகளைப் பல கிராமங்களுக்கு அனுப்பி நடவு செய்வோம்'' என்றார்.
தொடர்ந்து பனை விதைகளை நடவு செய்தார். நிகழ்ச்சியில் அதிகாரிகள், திமுக சொத்து பாதுகாப்புக்குழு அறந்தை ராஜன், அறந்தாங்கி ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.