கடந்த 2011- ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடைசி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுக்கா உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் எந்தெந்த கிராமங்கள் சேர்க்கப்படும் என்ற திட்ட வரைவுப் பட்டியலும் தயார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது.
இத்திட்டத்தின் அவசியம் குறித்து அறிந்த அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு மீண்டும் 2013- ஆம் ஆண்டு இதற்கான அரசாணை வெளியிட்டதுடன், மன்னார்குடி தாலுக்காவில் பாலையூர் பிர்காவில் உள்ள 18 வருவாய் கிராமங்களும், திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் உள்ள முத்துப்பேட்டை பிர்காவுக்கு உட்பட்ட 15 வருவாய் கிராமங்களையும் இணைத்து புதிய தாலுக்கா செயல்படும் என்று 20.2.2013- ல் அரசாணையையும், அதனைத் தொடர்ந்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
ஆனால் அந்த அரசாணை இன்று வரை செயல் வடிவம் பெறவில்லை. தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று முதலில் ஒதுக்கினாலும், பிறகு அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பிறகும் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. இதனால் முத்துப்பேட்டை மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அடிக்கடி போராட்டங்களை நடத்தியும் அரசின் கவனம் பெறவில்லை.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அந்த சுற்றுப்பயணத்தில் சில நாட்களுக்கு முன்பு முதல்வர் அமெரிக்கா சென்ற போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலிபோர்னியா மாகாணத்தில் தமிழக பிரதிநிதிகள் மற்றும் அங்கே வாழும் தமிழர்களை சந்தித்தார். அப்பொழுது அங்கு வசிக்கும் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜாபர் சாலிஹ் தலைமையில் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில் முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் மக்களின் பணிவான வேண்டுகோள் 2011ஆம் ஆண்டு முத்துப்பேட்டையை தனி தாலுகாவாக மாற்றுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் எந்த ஒரு நடவடிக்கையும், எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அறிவித்த திட்டம். எனவே தாங்கள் 110 விதியின் கீழ் முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக அறிவித்து, முத்துப்பேட்டை சுற்றுவட்டார மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி, அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடிதம் தொடர்பாக பரிசீலனை செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்ததாக அமெரிக்காவில் வசிக்கும் முத்துப்பேட்டை பிரதிநிதி ஜாபர் சாலிஹ் தெரிவித்தார். தி.மு.க அறிவித்த திட்டங்கள் மட்டுமல்ல, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவர் அறிவித்த திட்டங்களையும் எடப்பாடி அரசாங்கம் முடக்கி வைத்துள்ளது என்பதற்கு இந்த திட்டமும் ஒரு சான்றாக உள்ளது.