சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாணவர் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நீட்தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார் இதுதொடர்பாக பல்வேறு விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், நீட் ஆள்மாறாட்டத்தில் ஏற்கனவே சிக்கிய மாணவரான உதித்சூர்யா கொடுத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சென்னையை சேர்ந்த மூன்று மாணவர்கள் மற்றும் மாணவர்களின் தந்தைகள் மூன்றுபேர் என மொத்தம் ஆறு பேரை கைதுசெய்துள்ளது.
பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ், சத்யாசாய் மருத்துவ கல்லுரி மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் என கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் ஆள்மாறாட்டம், போலியான ஆவணங்களை தயாரித்தல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்திரபிரதேசம், டெல்லியில் இவர்களுக்காக வேறு நபர்கள் நீட் தேர்வு எழுதியதாகவும், இதற்காக பல லட்சம் ரூபாய் கைமாறியததாகவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் கைது செய்யப்பட்ட 6 பேரில் மாணவி அபிராமி,அவரது தந்தை மாதவன் தவிர மாற்ற4 பேரும் தேனி சிபிசிஐடி அலுவலத்திற்கு கொண்டுவரப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.