திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவர். அப்படி வரும் பக்தர்களுக்கு பேருந்து போக்குவரத்து போதவில்லை. இதனால் ரயில் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரயில்வே வாரியத்துக்கு வைக்கப்பட்டது.
அதன்படி சில இரயில்களின் சேவையை திருவண்ணாமலை வரை நீட்டித்துள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து தினமும் மாலை 06.00 மணிக்கு புறப்படும் (66017) ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வரை செல்லும். அந்த ரயிலை டிசம்பர் 9 முதல் 11ம் தேதி வரை திருவண்ணாமலை ரயில் நிலையம் வரை இயக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விழுப்புரம் டூ வேலூர் வரையிலான பயணிகள் 06842 என்கிற ரயில் கடலூர் (திருப்பாதிரிபுலியூர்) வரை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பாதிரிபுலியூரில் இருந்து டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் இரவு 8:50க்கு புறப்பட்டு நள்ளிரவில் 01.00 மணிக்கு வேலூர் சென்றடையும்.