கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபை கட்டுமான பணிகளுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சனிக்கிழமை நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வடலூர் சத்திய ஞான சபையில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடலூரில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் இந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களை ஆங்காங்கே காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி தமிழ் வேத ஆகம பாடசாலை தலைவர் சத்தியபாமா மற்றும் அவரது சீடர்கள் 8 பெண்கள் உள்ளிட்ட 42 பேர் வடலூருக்கு செல்லும் முன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனக சபை மீது ஏறி தேவாரம் திருவாசகம் பாடிவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தனர்.
இவர்களை சிதம்பரம் காவல்துறையினர் வடலூருக்கு செல்ல இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சத்தியபாமா செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையின் மீது ஏறி தேவாரம் திருவாசகம் பாட பக்தர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. இதனைத் தமிழக அரசு உறுதிபடுத்தியுள்ளது. ஆனால் கோவிலில் உள்ள தீட்சிதர்கள் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு இடையூறுகளை செய்கின்றனர் எனவே இந்த கோவிலை தமிழக அரசு முழு கட்டுப்பாட்டில் எடுத்து தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் வடலூர் பெருவெளியில் கட்டுமானத்தை நிறுத்தவேண்டும். இந்தப் போராட்டத்தை மீண்டும் ஒரு நாளில் நீதிமன்ற உத்திரவின்படி நடத்துவோம். இந்தக் கைது நடவடிக்கை கண்டிக்கதக்கது” என்றார்.