ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதவன் நடிப்பில் கடந்த மாதம் 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இதனிடையே இந்தியில் ஸ்ரீகாந்த் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தானி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜோதிகா செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரிடம், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முதற்வாக்குப்பதிவின் போது, ஏன் வாக்களிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “வருஷம் வருஷம் ஓட்டு போடுவேன். சில சமயங்களில் நீங்கள் வெளியூரில் இருக்க வேண்டியிருக்கும். உடல்நிலை சரியில்லாமல் கூட இருக்க நேரிடும். அது தனிப்பட்ட விஷயம். சில சமயங்களில் ஆன்லைன் மூலமாகக் கூட ஓட்டளிக்கலாம். எல்லா விஷயங்களும் பொது வெளியில் வெளிப்படுத்த தேவையில்லை. சில விஷயங்கள் தனிப்பட்டதாக வாழ்க்கையில் இருக்கின்றன. அந்த விஷயங்களுக்கு மரியாதை கொடுத்து அதற்கான இடத்தையும் கொடுக்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.
அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “இப்போதைக்கு அரசியலில் நுழையும் திட்டமில்லை. என்னுடைய இரண்டு பசங்களும் படிக்கிறாங்க. அவர்களையும் சினிமாவையும் சமநிலையில் கவனித்து வருகிறேன். உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டி வருகிறேன். ஆனால் அரசியல் வாய்ப்பே இல்லை.” எனப் பதிலளித்தார். மேலும் பேசிய அவர், “பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டும். நாம்தான் நம் குடும்பத்துக்கு பொறுப்பு, நம் குடும்பத்தின் முதுகெலும்பு. ஒரு 45 நிமிடம் ஒதுக்கி பெண்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம்” என்றார். விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “அவுட் ஆஃப் தி டாபிக்” எனக் கூறினார்.
மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிப்பது குறித்த கேள்விக்கு, “நானும் சூர்யாவும் சேர்ந்து நடிக்கும்படி கதை இன்னும் எங்களுக்கு வரவில்லை. அதற்காக 10 - 15 வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறோம். நல்ல கதை அமைந்தவுடன் கண்டிப்பாக நடிப்போம்” என்றார்.