காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் தமிழக அரசு யோகா, உடற்பயிற்சி போன்று பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. திருச்சி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கராத்தே, சிலம்பம், யோகா போன்ற உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதில் இன்று காலை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 காவல் மாவட்டங்களில் இருந்தும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் கலந்துகொண்டு மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி, மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி பெற்றனர். இந்நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் எச்.எம்.ஜெயராம், திருச்சி காவல் சரக காவல்துறை துணைத்தலைவர் ஆனி விஜயா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. எச்.எம்.ஜெயராம் பங்கேற்று பயிற்சிகளை செய்தார்.