சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை திரும்புகிறார். அவர் வரும்போது, அவரை கொடியேற்றச் செய்வதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இல்லம் அமைந்துள்ள ராமாவரம் தோட்ட நுழைவுவாயில் அருகே உள்ள நடைபாதையில், அமமுக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் லக்கி முருகன் கொடிக்கம்பத்தை அமைத்துள்ளார்.
அந்தக் கொடிக்கம்பம், தங்கள் இல்லத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியும், நடைபாதைக்கு இடைஞ்சலாகவும் உள்ளதால், அதை அகற்றக்கோரி எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களான கீதா, ராதா ஆகியோர் பரங்கிமலை துணை ஆணையர், நந்தமாக்கம் காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.
இந்நிலையில், அதே இடத்தில் லக்கி முருகன் மீண்டும் கொடிக்கம்ப மேடையைக் கட்டியுள்ளதால், தங்களது அனுமதி இல்லாமல் மீண்டும் உருவாக்கியுள்ள அந்த ஆக்கிரமிப்பை அகற்றவும், தங்கள் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு வழக்கறிஞர் இளங்கோவன் முறையிட்டார்.
அதனையேற்று, வழக்கை வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 8) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.