எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு ஆண்டு தோறும் மத்திய, மாநில அரசுகள் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்கின்றனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியை தொகுதியில் உள்ள மக்களுக்கு என்ன தேவையோ? அதனை பூர்த்தி செய்ய இந்த நிதியை எம்.பி, எம்.எல்.ஏக்கள் செலவழிக்கின்றனர். அந்த நிதியை கொண்டு கட்டப்படும் கட்டிடங்களையோ? அல்லது மற்ற திட்ட பணிகளையோ? பெரும்பாலான எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மேற்பார்வையிடாமல் இருக்கின்றனர். பின்னர் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் மட்டும் கலந்துக் கொண்டு விட்டு வந்து விடுகின்றனர். ஒரு சில எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மட்டும், தான் ஒதுக்கிய நிதியை சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? ஒப்பந்ததாரர்கள் சரியாக பணிகளை செய்கிறார்களா? என கண்காணிப்பார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி (திமுக) தனது தொகுதி நிதியில் இருந்து தி.கல்லேரி ஊராட்சிக்குட்பட்ட சமுக்குடையாம்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 8 லட்சமும், விருதுவிளங்கினான் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் ரூபாய் 2 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மினிடேங்க் அமைத்து தரவும், சு.வாளவெட்டி ஊராட்சியில் ஈமசடங்கு மண்டபம் கட்டி தர ரூபாய் 3 லட்சமும், காடகமான் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர ரூபாய் 2 லட்சமும் தனது தொகுதி மேம்பாட்டு வளர்ச்சியில் இருந்து கடந்த நிதி ஒதுக்கியிருந்தார். அந்த நிதியை கொண்டு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் கட்டிடங்கள் கட்டப்பட்டும், ஆழ்துளை கிணறு அமைத்தும், சுற்றுச்சுவர் கட்டியும் முடித்துள்ளனர்.
இந்த தகவல் தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் பிச்சாண்டிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தான் ஒதுக்கிய நிதி, சரியாக ஒழுங்காக செலவிட்டு, பலமாக கட்டிடங்களை கட்டியுள்ளார்களா? கட்டப்பட்ட கட்டிங்களுக்கு சரியாக போக்குவரத்துக்கான வழிகள் உள்ளதா? ஆழ்துளை கிணற்றில் இருந்து சரியாக நீர் வருகிறதா? என சம்மந்தப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அந்த கிராமங்களில் வேறு ஏதாவது குறைப்பாடுகள் உள்ளதா? என மக்களிடம் கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக கிராமங்களுக்கு ஏதாவது தேவையென்றால் நேரடியாக என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள் என்று கட்சியின் நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அங்கன்வாடி மையம், ஆழ்துளை கிணறு, தகனமேடை போன்றவற்றுக்கு திறப்பு விழாவை உடனடியாக நடத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வேண்டுக்கோள் வைத்துள்ளார் பிச்சாண்டி என்பது குறிப்பிடதக்கது. தி.கல்லேரியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "கட்டிடம் கட்டும் போதே அதிகாரிகளோடு, எம்.எல்.ஏ ஒருமுறை வந்து பார்த்து விட்டு சென்றார். அதனால் தான் ஒப்பந்தம் எடுத்தவர்கள் பயத்தோடு சரியா கட்டியிருக்காங்க. கட்டடம் கட்டி முடிச்சப்பிறகும் வந்து பார்த்துட்டு போயிருக்கார். இதுக்காகவே எம்.எல்.ஏவை பாராட்டலாம்" என்றார்.