புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் தூத்துக்குடி அசன்மைதீன், ராமநாதபுரம் அருண்பாண்டியன், கோட்டைப்பட்டிணம் அன்வர் ராஜா ஆகிய மூவரும் மது கிடைக்காததால் மது போதைக்கு மாற்றாக சேவிங் லோசன் வாங்கி செவன் அப்-ல் கலந்து குடித்து ஆபத்தான நிலையில் மயங்கி விழ அருகில் நின்றவர்கள் போலீசாருக்கு தவகல் கொடுத்துவிட்டு அவர்களை மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அசன்மைதீன், அருண்பாண்டியன் இருவரும் பலியானார்கள். அன்வர்ராஜா ஆபத்தான நிலையில் அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாலையில் அன்வர்ராஜாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மது போதை கிடைக்காமல் மாற்றுப் போதையில் இணைந்த நண்பர்கள் 3 பேரும் அடுத்தடுத்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மற்றொருவர் இதே லோசன் குடித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் இது போல மாத்திரை மற்றும் எண்ணெய்கள், போன்ற மாற்று போதைக்கு மாறிக் கொண்டிருப்பதை நக்கீரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் போதை ஊசி, மாத்திரைகள் விற்பனை செய்த கும்பல் பிடிபட்டது. இது போன்ற செயலில் ஈடுபடுவார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி அருண்சக்தி குமார் கூறியுள்ளனர்.