மதுரை சொக்கிகுளம் பகுதியில் கோகலே சாலையில் உள்ள விஷால் டி மால்-க்கு விதிகளை மீறி மதுபான பார் உரிமம் வழங்கியதை எதிர்த்து ஸ்டாலின் என்பவர் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் "5 மாடி கட்டிடத்தில் தமிழக சுற்றுலா துறை அனுமதி பெறாமல் நட்சத்திர ஹோட்டலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதகவும், 4 வது தளத்தில் 5 திரையரங்குகள் அமைக்கப்ப ட்டுள்ளதாகவும், மேலும் போதுமான வாகன நிறுத்தும் இடமில்லாமல் கட்டபட்டுள்ளது என்றும், போதுமான வாகன நிறுத்தம் இல்லாததால் கோகலே சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அருகில் மகளிர் கல்லூரி இருக்கும் நிலையில், வாரத்தில் ஒருநாள் மாணவிகளுக்கும், பெண்களுக்கும் இலவச மதுபானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும்" மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன்,நீதிபதி என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் உத்தரவின் படி, மாவட்ட ஆட்சியர், தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், வணிக வளாகமாக கட்டப்பட்ட கட்டிடத்தை நட்சத்திர உணவுவிடுதியாக மாற்றியுள்ளனர் என்றும், 3 மாதங்களில் 35 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளதையும், சுற்றுலாத்துறை இயக்குநரின் அனுமதியையும் பெறவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 300 வாகனங்கள் அமைக்கப்பட வேண்டிய நிலையில், 95 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு மட்டுமே வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்ட பார் உரிமத்தை ரத்துசெய்த நீதிபதிகள், வணிக வளாக தரப்பில் பார் உரிமம் கோரி புதிய விண்ணப்பம் கொடுக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் மற்ற அதிகாரிகளுடன் ஆய்வு செய்யவும், விதிமுறைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டனர்.
பிப்ரவரி 2ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்தை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தை முன்னெச்சரிக்கையாக கருதி, மதுரை மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள கட்டிடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
காளான் போல பெருகிவரும், சட்டவிரோத கட்டிடங்கள் அதில் ஏற்படும் தீ விபத்துகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்புதுறை அதிகாரிகள் தீவிரமாக பார்க்காவிட்டால் டெல்லி உப்ஹார் தீ விபத்து போன்ற ஒரு சம்பவம் மதுரையில் நிகழ்வதற்காக சாத்தியங்கள் இருப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் வேதனை தெரிவித்துள்ளனர்.