இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை, அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அலுவலராக உள்ள ஆட்சியர்கள் வெளியிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடந்தது. கலெக்டர் கதிரவன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதை ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 தொகுதிகளைக் கொண்ட ஈரோடு மாவட்டத்தில், 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 9,36,022, பெண்கள் 9,80,414 மூன்றாம் பாலினத்தவர் 95 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட 44 ஆயிரத்து 392 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 926 இடங்களில் 2,215 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பட்டியல் அனைத்து வாக்குச் சாவடிகள், வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், பெயர் சேர்த்தல் நீக்கல் உள்ளிட்டப் பணிகளுக்கு, வரும் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12,13 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கலெக்டர் கதிரவன் தெரிவித்தார். பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளுமாறும் கூறினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் படி ஈரோட்டில் ஆண்களைவிட பெண்களே அதிகம்.