கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஒரு இனம் சார்ந்த சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் பிரசாரத்தின் கடைசி நாட்களில், தான் சார்ந்துள்ள இன இளைஞர்களுடன் தொகுதில் பல இடங்களுக்கும் 500 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கார்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினார். இதில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக ஏராளமான இஞைர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் பற்றியும் அவர் சார்ந்துள்ள சாதி பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றியும் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சிக்கும் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

மேற்கண்ட ஆடியோவில் இடம் பெற்றுள்ள இருவரையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செல்வராஜின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தை இரவு முற்றுகையிட்டனர். மேலும், ஊர்வலமாக காவல்நிலையம் செல்லும் வழியில் சிலர் அங்குள்ள சில கடைகளின் பெயர் பலகைகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதனால் பொன்னமராவதி வர்த்தக சங்கங்கள் இணைந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பொன்னமராவதி போலீஸார் விசாரிக்கின்றனர்.
ஆனாலும் பொன்னமராவதி பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதால் வாக்குசாவடிகளுக்கு சென்றுள்ள போலிசாரை பொன்னமராவதிக்கு அழைத்துள்ளனர்.