திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த 9 வயது சிறுமி தான்யா முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். தமிழக முதல்வரிடமும் நான் படிக்கும் பள்ளியில் உடன் பயிலும் மாணவர்கள் யாரும் என்னுடன் பேசுவதில்லை என்றும் சிகிச்சை அளித்து என் முகத்தை சரி செய்ய உதவி செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்தது. அதேபோல் சிறுமியின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி அறுவை சிகிச்சை முடிந்தது. மொத்தம் 10 பேர் கொண்ட மருத்துவக்குழு இந்த அறுவை சிகிச்சையை முடித்திருந்தது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுமி தான்யா வைக்கப்பட்டிருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி தான்யா இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.