அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடதுக்கீடு வழங்க வகைசெய்யும் தமிழக அரசின் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பொன்முடி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "7.5% உள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு 40 நாட்கள் ஆகியும் ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் தாமதம் செய்தால் அ.தி.மு.க அரசு கைவிட்டுவிடும் என ஆளுநர் நினைக்கிறார். ஆளுநரை முதல்வர் கேள்வி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன். எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்" என முதல்வருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டில் ஸ்டாலின் அரசியல் செய்வதாக முதல்வர் கூறியிருந்த நிலையில், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி ஒரு மாதமான நிலையில், மசோதா பற்றி முடிவெடுக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேலும் நான்கு வாரம் அவகாசம் கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.