16- வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று (21/06/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் உரையில் பொருளாதார ஆலோசனை குழு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.
குறிப்பாக, "தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து ஜூலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழக நிதி நிலையின் தற்போதைய உண்மை நிலையை மக்களுக்கு வெள்ளை அறிக்கை விளக்கும். தமிழகத்தின் நிதி நிலைமை கவலைக்குரியதாக இருக்கும் சூழலில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது" என்று அந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெள்ளை அறிக்கையில் என்னென்ன தகவல்கள் இடம்பெறும்?
குறிப்பிட்ட பிரச்சனை குறித்து முழுமையாக ஒளிவுமறைவின்றி உண்மை நிலையை வெளிப்படுத்தும் அரசின் ஆவணமே வெள்ளை அறிக்கை. இதில் புள்ளி விவரங்கள், பிரச்சனைக்கான விளக்கங்கள் இருக்கும். ஜூலை மாதம் தமிழக அரசு வெளியிட உள்ள வெள்ளை அறிக்கையில் மாநிலத்தின் கடன் சுமைக்கு என்ன காரணம் என விளக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது, கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தனது வருவாய் இலக்கை எட்டவில்லை. செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்ததால் வருவாய் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியது சுட்டிக் காட்டப்படலாம்.
வருவாய் இன்றித் திட்டங்களை நிறைவேற்ற கடன்கள் வாங்கியதாலும், அந்த கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டியாலும் ஆண்டுதோறும் ஏற்படும் செலவினம் குறித்தும், கடந்த 2011- ஆம் ஆண்டு ரூபாய் 1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை 2020- 2021 ஆம் நிதியாண்டில் ரூபாய் 5 லட்சம் கோடியாக அதிகரித்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும், ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்திய பிறகு மதிப்புக் கூட்டு வரி மூலம் தமிழக அரசுக்கு நேரடியாகக் கிடைத்த வருவாயை இழந்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்ட நஷ்டம் குறித்தும் இதில் விளக்கப்படலாம்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கே அதிகம் விற்கப்படுவதால் நமக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி. வருவாயும் மிகக்குறைவே. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் நிதிக்குழுவும் தமிழகத்திற்கான வருவாய் பகிர்ந்தளிப்பு சதவீதத்தைக் குறைத்து வருகிறது. மதுக்கடைகள் வருவாய் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 30,000 கோடியும், பெட்ரோல்- டீசல் விற்பனையால் ஆண்டுக்கு ரூபாய் 30,000 கோடியும் தமிழக அரசின் பிரதான வருமானமாக உள்ளது. இவையெல்லாம் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படலாம்.