
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ளது மங்கலம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் அஜித் (வயது 26). இவர் நேற்று முன்தினம் (07/04/2021) மாலை தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி காந்தி, கண்டியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் ஆகியோருடன் அருளம்பாடி அருகே முகுந்தா நதி கரையில் உள்ள ஒரு காட்டுக்கோவிலின் பின்பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது மதுபோதை மூவருக்கும் அதிகமானதும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறின்போது அஜித்தைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அவரது அருகில் மூவரில் ஒருவரான சின்னராஜ் படுத்தபடியே போதை ஏறிய நிலையில் உளறிக்கொண்டிருந்துள்ளார். அந்த வழியாக வயல் வேலைக்கு சென்றவர்கள், அஜித் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், அவரது அருகில் குடிபோதையில் ஒரு இளைஞன் உளறிக்கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து உடனடியாக மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் உளறிக்கொண்டிருந்த சின்னராஜை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மூன்று பேர் மது அருந்தியுள்ள நிலையில் சஞ்சீவி காந்தி மட்டும் காணவில்லை. இதனால் அவர் அஜித்தை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்ற கோணத்தில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதேபோல் அஜித் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.