
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "கரோனா மூன்றாவது அலை வருமா என சுகாதாரத்துறை வல்லுநர்கள் கருத்துகளின் அடிப்படையில்தான் கூற முடியும். கேரளாவில் தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு மேல் பதிவாகியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். மக்களின் பழக்கங்களில் மாற்றம் தேவை. கரோனா தடுப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ள மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.