நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொட்டும் மழையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார்.
நாட்டின் 72-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். இதேபோல் அனைத்து மாநில தலைநகரங்களிலும் முதலமைச்சர்கள் கொடியேற்றி உரையாற்றுகின்றனர்.
அதன்படி சென்னை கோட்டையில், கொட்டும் மழையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். பின்னர் முப்படை வீரர்கள் முன்னிலையில், தேசியக்கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2வது முறையாக சுதந்திர தின கொடியேற்றியதில் பெருமை அடைகிறேன். பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த தியாக பூமி தமிழகம். வரலாற்று நாயகர்களை நாம் என்றும் போற்றி வணங்க வேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி தமிழகத்தில் தான் துவங்கியது என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
ஆயுதப் போரிலும், அறப்போரிலும் அதிக பங்காற்றியது தமிழகம் தான். சுதந்திர போராட்ட வீரர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயியாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.
மதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜாதி, மதம் மறந்து தமிழகத்தில் அனைவரும் குடும்பம் போல வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் இஸ்லாமிய பெண்கள் வசதிக்காக மகளிர் விடுதி கட்டப்படுகிறது. ஜெருசேலம் செல்லும் கிறித்துவர்களின் எண்ணிக்கை 500லிருந்து 600ஆக உயர்த்தப்படும்.
அங்கிகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 2 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற அரசு தொடர்ந்து பாடுபடும். முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.