
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு சமர்ப்பித்திருக்கிறார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2329 கிராமங்களில் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6100 கி.மீ. கிராம சாலைகளை மேம்படுத்த ரூபாய் 2200 கோடி.
அதேபோல மகளிர் உரிமை திட்டம் தற்போது 1 கோடியே 15 லட்சம் பேர் ரூபாய் 1000 மாதந்தோறும் பெற்று பயணடைந்து வருகின்றனர். இதை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடிகளுக்கிடையே இத்திட்டத்திற்கு ரூபாய் 13807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி படிப்பில் சேருகிற வாய்ப்பை அதிகப்படுத்த புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 4 லட்சம் பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள். இதனால் உயர்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை 19 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. மகளிர் சுயஉதவிக்குழு திட்டத்தில் 4.76 லட்சம் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10,000 புதிய குழுக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூபாய் 37,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளது. அதேபோல, மகளிர் விடியல் பயணத்திற்கு ரூபாய் 3600 கோடி, காலை உணவு திட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் 17 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தை நகர்ப்புறங்களில் விரிவாக்கம் செய்வதன் மூலம் 3.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கான வருகை அதிகரித்திருக்கிறது. இதற்காக ரூபாய் 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மதிய உணவு திட்டத்தினால் மாணவர் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் கடைபிடிக்காத காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை முதலமைச்சர் செய்திருக்கிறார். மும்மொழித் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தாலும், இன்றைய நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூபாய் 46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 2152 கோடி, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்காக ரூபாய் 2,000 கோடி ஒன்றிய அரசு வழங்க மறுத்த நிலையில், பள்ளிகளின் செயல்பாட்டிற்கு மாநில அரசின் சொந்த நிதியிலிருந்தே நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு முதலமைச்சருக்கு இருக்கிற கொள்கை பற்றை வெளிப்படுத்துகிறது. அதேபோல, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை பெருக்கி, வாழ்வாதாரத்தை உருவாக்கிடும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 3796 கோடி விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்த நிதியை வழங்க மறுப்பதன் மூலம், 100 நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு முடக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதையும் மீறி தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை சொந்த நிதியிலிருந்து நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. மூத்த குடிமக்களுக்காக ரூபாய் 10 கோடி செலவில் அன்புச்சோலை மையங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குடிமைப்பணிகளுக்கான தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் 7000 வீதம் 10 மாத காலத்திற்கு வழங்க நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் அகில இந்திய தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அரசு கல்லூரிகளில் 15000 இடங்கள் கூடுதலாக விரிவுபடுத்தப்பட இருக்கிறது. சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்பட இருக்கிறது. திருக்குறள் இதுவரை 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதை விரிவுபடுத்தி உலக மொழிகள் அனைத்திலும் திருக்குறள் வெளியிடும் திட்டத்திற்காக ரூபாய் 133 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு 3500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் அமைக்கப்பட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி இரண்டு ஆண்டுகளில் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கு காரணமாக பகிரங்கமாக மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்ற பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிற இக்கட்டான சூழலில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகிற வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. எத்தனை சோதனைகள் வந்தாலும், அடக்குமுறைகளை ஏவிவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக எடுக்கிற முயற்சிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிரூபித்திருக்கிறார். அனைத்து மக்களையும் உள்ளடக்கி பயன்பெறுகிற வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முறையாக நிதியை ஒதுக்கியிருக்கிற நிதியமைச்ச தங்கம் தென்னரசுவைபாராட்டுகிறேன்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நேரலையாக பொதுமக்கள் காண்கிற வகையில் தமிழகத்தில் 936 இடங்களிலும், சென்னையில் மட்டும் 100 இடங்களில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நோக்கத்தில் மக்கள் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.