
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தியா - இலங்கை உறவை மேம்படுத்தும் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில் தமிழக மீனவர்களும் அனுமதிக்கப்படுவர். மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க விழா இன்று (14.03.2025) மாலை 4 மணியளவில் (இலங்கை நேரப்படி) அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இந்த கொடியை யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் ஏற்றி வைத்தார். தமிழகத்தின் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், ராமேஸ்வரம் பங்குத் தந்தை அசோக் வினோத், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அஸ்டின் ஞானப்பிரகாசம், யாழ்ப்பாணம் புது முதல்வர் அருட்தந்தை ஜோசப் தாஸ் எவரெத்தினம் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சபை மாலையைச் சுமந்து வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் இன்று இரவு புனித அந்தோனியாரின் தேர் பவனியும் நடைபெற உள்ளது. இதனையடுத்து திருவிழாவின் இரண்டாம் நாளான நாளை (15.03.2024) காலை கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கொடி இறக்கத்துடன் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா முடிவடைகிறது. அதன் பின்னர் இந்தியப் பக்தர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவர்.