தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் மே-22-2018-ல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் போது தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தமிழக காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் பொது மற்றும் தனியார் சொத்துகள் மீது சேதம் ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்குகள் தவிர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கைதான நபர்களின் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக தடையில்லாச் சான்று அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகள் தவிர ஏனைய அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.