Skip to main content

வைகோ எம்பியாக பதவியேற்பு... 1 ரூபாய்க்கு டீ-காபி வழங்கிய மதிமுக பெண் தொண்டர்!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு தடைகளைத் தாண்டி தமிழகத்தில் இருந்து திமுக ஆதரவுடன், மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றார். 

மதிமுகவில் வைகோவின் மீது அளவு கடந்த பாசமும் பற்றுக் கொண்டவர்களே இன்னும் அந்த கட்சியில் அதிகமாக உள்ளனர். அப்படி ஒரு பற்றாளர்தான்.. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வீரியன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி (வயது 46). கணவரை இழந்த இவர் தனது பிழைப்புக்காக டீக்கடை நடத்தி வருகிறார். வைகோவின் மீது பற்றுள்ளவரான இவர் மதிமுக அனுதாபி. இன்று வியாழக்கிழமை  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு டீ, காபி வழங்கினார். 

Sworn in as Viko in mp.. mdmk Woman Volunteer Who Offers Tea-Coffee for 1 Rupee!


இதுகுறித்து முத்துலெட்சுமி கூறியதாவது, "எனது கணவர் வெள்ளைச்சாமி மதிமுகவின் தீவிரத் தொண்டர். சேதுபாவாசத்திரம் ஒன்றிய துணைச் செயலாளராக இருந்தார். மதிமுக நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். மாநாடு, பொதுக்கூட்டம் என வறுமை நிலையிலும் தமிழகம் முழுவதும் சென்று பங்கேற்றவர். எங்களுக்கு மூன்று குழந்தைகள். இலங்கை தமிழர்கள் மீது பற்றுக் கொண்டவர். அதனால் ஒரு மகனுக்கு பாலசிங்கம் எனவும், இன்னொரு மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயர் வைத்தார். வைகோவின் தீவிர விசுவாசியான அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் இறந்து விட்டார். அவர் உயிருடன் இருந்தால் என்ன செய்வாரோ, அவரது கனவை நனவாக்கும் விதமாக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்றதை கொண்டாடும் விதமாக 1 ரூபாய்க்கு டீ-காபி இன்று (வியாழக்கிழமை) ஒருநா‌ள் மட்டும் வழங்கினேன்" என்றார். 

 

Sworn in as Viko in mp.. mdmk Woman Volunteer Who Offers Tea-Coffee for 1 Rupee!


இந்த தகவலறிந்து வந்த மதிமுக ஒன்றிய செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் பாலசுப்பிரமணியன், பேராவூரணி குறிச்சி மணிவாசகன்,  நகரச்செயலாளர் க.குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாஞ்சி ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கட்சியினர் சங்கர், உத்தமன் ஆகியோர் முத்துலெட்சுமிக்கு துண்டு அணிவித்து பாராட்டினார்கள். ஏராளமான கிராமத்தினர், பொதுமக்கள் வந்து 1 ரூபாய் தேநீர் அருந்தி விட்டு முத்துலெட்சுமியை வாழ்த்திச் சென்றனர். 

இதேபோல பேராவூரணி அருகில் உள்ள கொன்றைக்காடு கிராமத்தைச் சேர்ந்த டீ க்கடை முத்தையன் என்ற மதிமுக தொண்டர், ஈரோடு கணேசமூர்த்தி மக்களவையில் எம்.பியாக பதவி ஏற்றுக் கொண்ட நாளில் ஒரு ரூபாயக்கு டீ, காபி, வடை ஆகியவற்றை வழங்கினார். இப்படி மதிமுகவின் ஏழை தொண்டர்கள் தங்களால் இயன்றதை செய்து வருகிறார்கள். 

அதேநேரத்தில் பேராவூரணியில் தங்கவேலனார் என்பவர் பல வருடங்களாக திருவள்ளுவர் தினத்தில் ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொடுக்க மனமிருக்கிறது அதனால் இயன்றதை கொடுக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்