உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகளின் புகலிடமாகவும், வன விலங்குகளின் சரணாலயமாகவும் உள்ள கோடியக்கரை, பசுமை மாறா காடுகளையும் கொண்டுள்ளது. அந்த அழகிய வனம் கஜாபுயலில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது 10 ஆண்டுகளை தாண்டும் என்கிறார்கள் வனம் மன்றும் உயிரின ஆர்வலர்கள்.
நாகை மாவட்டம், வங்க கடலோரத்தின் கடைகோடி தாலுகாவான வேதாரண்யத்தில் இருந்து பத்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது கோடியக்கரை. அந்த கிராமத்தின் கிழக்கே கடலோரமாக சுமார் 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது கோடியக்காடு. அந்தக் காட்டில் பல்வேறு வகையான மரங்களும், மூலிகை செடிகளும், பசுமை மாறாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன. அங்கு வன விலங்குகள் சரணாலயமும், வனத்தின் மற்றொரு பகுதியில் பறவைகள் சரணாலயமும் பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்துவந்தது. அழகிய புள்ளி மான்களும், வெளி மான்களும், குதிரைகளும், நரிகளும், காட்டுப்பன்றி, முயல், குரங்கு என பல்வேறு வகையான உயிரினங்களும் பார்வையாளர்களை நெகிழ வைத்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 15 ம்தேதி யாரும் எதிர்பார்த்திடாத வகையில் வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தால் கணக்கிலடங்காத மான்களும், வனவிலங்குகளும் செத்து மிதந்தன. காற்றின் தாக்கத்தை தாங்கமுடியாமல் காட்டைவிட்டு சிதறி தப்பி ஓடிய மான்கள், குதிரைகள் கடல் சேற்றில் சிக்கி இறந்தன. ஆனால் வனத்துறை அதிகாரிகளோ 10 மான்களுக்கு மேல் இறக்கவில்லை என மூடிமறைத்தனர்.
கோடியக்காட்டிற்குள் நுழையும் வழியில் மூலிகைகளுக்கான வனமும் இருந்தது. அங்கு காய்ச்சல், சளி, ஆஸ்துமா, புற்றுநோய், வாதம், கபம், என பல்வேறு வகையான நோய்களைத் தீர்க்கக்கூடிய மூலிகைகளும் காணப்பட்டது. இதை தினசரி நாட்டு வைத்தியர்களும், பொதுமக்களும் பயன்படுத்திவந்தனர். அந்த பகுதியும் காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிடவில்லை. மூலிகை மரங்களும், செடிகளும், முறிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
காட்டுப் பகுதியிலும் அதனை ஒட்டிய சதுப்பு நிலப்பகுதியிலும் உப்புத்தண்ணீர் நிறைந்த பகுதிகளில் பறவைகள் சரணாலயம் இருக்கிறது. ஆண்டுதோறும் சீசன் காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை, ஈரான், ஈராக், ரஷ்யா, சீனா, இலங்கை, பங்களாதேஷ், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள குளிர்பிரதேசங்களில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் கோடியக்காட்டிற்கு வந்து பார்ப்பவர்களை மனம் குளிர வைத்துக் கொண்டிருந்தது. இந்த ஆண்டும் வழக்கம்போல் பறவைகளின் வருகையும் இருந்தது. ஆனால் அவற்றுக்கான காலசூழலும், காடுகளும், இல்லாமல் போனதால் ஏமாற்றத்துடன் உடனே திரும்பி சென்று விட்டன.
"புயல் கரையை கடந்து மூன்று மாதங்களை கடந்துவிட்டது. வனத்தையோ, வனவிலங்குகளையோ காப்பாற்றும் முயற்சியில் அரசாங்கமோ, வனத்துறை அதிகாரிகளோ முனைப்புக்காட்டவில்லை. எங்க ஊருக்கு புகழே காடுதான். அந்த காடுகள் முற்றிலுமாக முறிந்து சிதைந்து சின்னாபின்னமாகி பாலைவனமாக மாறிக்கிடக்கிறது. முறிந்த மரங்களின் கிளைகளை அப்புறப்படுத்தி, வனத்திற்கு தேவையான மரக்கன்றுகளையும், மூலிகை வனத்திற்கு தேவையான மூலிகை செடிகளையும் உருவாக்கிட வேண்டும். காட்டில் எஞ்சியிருக்கும் விலங்களுக்கு பிப்ரவரி மாதம் துவக்கத்திலேயே தண்ணீர் இல்லாத நிலையிருக்கிறது. வரும் மார்ச், ஏப்ரல், மே மாதம் கடும்கோடை நிலவும். அப்போது எஞ்சியிருக்கும் விலங்கள் தண்ணீருக்கு தவித்து இறந்துபோகும் நிலையே உருவாகும். அதனை தடுத்திடும் வகையில் எந்த முயற்சியும் அரசு எடுக்கவில்லை. உடனே அரசு வனத்தைக் காப்பாற்றி, சுற்றுலா இடமாக மாற்றிட முன்வரவேண்டும்." என்கிறார்கள் சமுக ஆர்வளர்கள்.