Skip to main content

கூட்டுறவு சங்கச் செயலாளர் பணியிடைநீக்கம்; ஓய்வு பெற 2 நாட்களே உள்ள நிலையில் அதிரடி!

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

suspended of Cooperative Society Secretary

 

கடன் தவணையை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத கூட்டுறவு சங்கச் செயலாளர் பணி ஓய்வு பெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் திடீரென்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள தோரமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு நகைக்கடன், பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அப்புசாமி (60) என்பவர் இந்த சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஏப்ரல் 30ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார்.

 

இந்நிலையில், சங்கத்தின் மூலம் அதிகளவு கடன் வழங்கியிருக்கும்போது அதை உரிய முறையில் வசூலிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மீது புகார்கள் கிளம்பின. இது தொடர்பாக ஓமலூர் சரக கூட்டுறவுத்துறை அலுவலர்கள் விசாரித்தனர். கோடிக்கணக்கில் தவணை தவறிய கடன் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

 

இதுகுறித்த விசாரணை அறிக்கை மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதையடுத்து, தோரமங்கலம் கூட்டுறவு சங்கச் செயலாளர் அப்புசாமியை பணியிடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அப்புசாமி ஓய்வு பெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்