மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து 70 மணி நேரங்களாக தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. உயர் தொழில் நுட்பங்களும் அந்த இடத்தில் பயனளிக்காத நிலையில் உள்ளன.
தொடக்கத்தில் தனியார் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் இறுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் வீரமணி குழுவினர் களமிறங்கினார்கள். இவர்கள் 26 அடியில் குழந்தை சிக்கி இருக்கும் போது உள்ள சிறு ஓட்டை வழியாக கீழே அவர்களின் கருவியை உள்ளே அனுப்பி குழந்தையை மீட்கும் படி தயாராக இருந்தனர். ஆனால் அதற்கு முன்பே குழந்தை 70 அடிக்கு கீழே இறங்கி மண் மூடி இருந்ததால் அந்த மண்ணை அகற்ற கால அவகாசம் இல்லாமல் முயற்சி பலனளிக்கவில்லை.
ஆனால் வீரமணி குழுவினரின் கருவியும், முயற்சியும் பலனளிக்கும் என்பதை அதிகாரிகள் அறிந்து கொண்ட நிலையில், இன்று மதியம் திடீரென வீரமணியை தொடர்பு கொண்ட அதிகாரிகள் மீண்டு வந்து குழந்தையை மீட்க முயற்சி செய்யுங்கள் என்று அழைத்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து கொத்தமங்கலத்தில் இருந்து வீரமணி, சதாசிவம், அருள் ராஜசிங்கம், விஜய் ஆனந்த், ராஜேந்திரன், அலெக்ஸ், தங்கராசு ஆகிய 7 பேர்கள் கொண்ட மீட்புக்குழுவினர் நடுக்காட்டுப்பட்டி நோக்கி புறப்பட்டுள்ளனர்.
அதற்கு முன்பாக நம்மிடம் பேசிய வீரமணி.. எங்கள் பார்முலாவை பயன்படுத்தி குழந்தையை மீட்கப்படலாம் என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தை சிக்கி இருக்கும் இடத்தில் ஒரு அங்குலம் அளவிற்கு ஒரு சந்து இருந்தால் போதும். அந்த சந்து வழியாக குழந்தைக்கு கீழே எங்கள் கருவியை இறக்கி அப்படியே குழந்தையை அமர்ந்த நிலையில் வைத்து மேலே ஏற்றிக் கொண்டு வந்துவிடுவோம். இந்த முறை எங்கள் முயற்சி வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
எப்படியாவது குழந்தை சுஜித் மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தான் ஒட்டுமொத்த மக்களிடமும் உள்ளது. மீட்கப்பட வேண்டும்.