ஒரே இரவினில், ஒரே அலுவலகத்திலுள்ள உத்தமர் காந்தி விருது வாங்கிய பாளையங்கோட்டை உதவிக் கமிஷனர் சக்கரவர்த்தியை காத்திருப்போர் பட்டியலுக்கும், அவருக்கு உதவியதாக முகாம் அலுவலக எஸ்.எஸ்.ஐ.க்கள் அன்னராஜ் மற்றும் தர்மராஜ், ஏட்டுக்கள் முருகேசன் மற்றும் சங்கர் உள்ளிட்டோர் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டதும் பரப்பரப்புக்குள்ளாகியது நெல்லை மாநகர காவல்துறை.
இடமாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும்? என்கின்ற நிலையில், வன்னாரப்பேட்டையை சேர்ந்த பொறியாளர் ஜாஸ்பின் வினோதரோ, " எனக்கும் பலூன் வியாபாரி கண்ணனிற்கும் ரூ.2000 சம்பந்தமாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்தது. இந்த பிரச்சனையை பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் எஸ்.ஐ.மகாலெட்சுமி என்னுடைய உடைகளை கழட்டி விசாரிச்சாங்க. இது சரியானது அல்ல. உங்களுடைய மேற்பார்வையில் விசாரித்தால் நன்றாக இருக்கும் என திருநெல்வேலி சிட்டி டெபுடி கமிஷனர் சுகுனாசிங்கிடம் மனு கொடுத்தேன். அவரோ உடனடியாக பாளையங்கோட்டை ஏ.சி.சக்கரவர்த்தி விசாரிக்க குறிப்பு எழுதி அனுப்பி வைச்சார். முதல் நாள் விசாரணையின் போது என்ன நடந்ததென என்னை விசாரித்துவிட்டு மறுநாள் வரச்சொன்னார்கள். அப்பத்தான் தெரிஞ்சது, ஏ.சி.சக்கரவர்த்தி ஆற்றுமீன் பிரியர் என்றும், இரவானதும் வண்ணாரப்பேட்டை பாலத்தின் அடியில் மீன் பிடித்து சுட்டு சாப்பிடுவார் என்றும் அதற்கு உதவி செய்வதே என்னுடைய எதிராளி எனத் தெரியவந்தது. ஆக இப்பொழுதும் நமக்கு நியாயம் கிடைக்காது எனத் தெரியவந்தது.
மறுநாள் ஏ.சி.கேம்ப் ஆபிசிற்கு போனேன். அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ.அன்னராஜ் என்னிடம் தாறுமாறாக பேச, முந்தின நாள் நான் கேள்விப்பட்டது உறுதியாக, "ஏங்க மீன் பிடிச்சு தின்பது தெரியாதா?" என துடுக்குத் தனமாய் கேட்டுவிட்டேன். அவ்வளவு தான் அங்கிருந்த அத்தனை பேரும் என்னை அடித்து துவைக்க ஆரம்பித்தனர். ஏ.சி.யோ இரண்டு கைகளையும் நீட்டக் கூறி கை ஒடையும் வரை அடித்துக் கொண்டிருந்தார். அதுபோக, நாய் மாதிரி நடக்கனும், வாலாட்டனும் என என்னை கைகளை ஊன்றியும், கால்களை முட்டிப் போட வைத்தும் கொடுமைப்படுத்தினார். இந்தக் கொடுமைகள் அத்தனையும் அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவானது. மனித உரிமை மீறலான செயல் என்பதால் இதனை அழிக்கக் கூடாது என ஏ.சி.உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பினேன். அதனுடைய வெளிப்பாடாக இருக்கலாம் " என்கிறார் அவர்.
இது இப்படியிருக்க, ஹம்சத் எனும் கடற்கரையோர தங்கக் கடத்தல் புள்ளி தனக்கு சேரவேண்டிய ஐந்தரைக் கிலோ தங்கத்தை, "இன்னாரிடமிருந்து வாங்கித் தாருங்கள், இத்தனை சதவீதம் வாங்கித் தருகிறேன்" என ஆப் த ரிக்கார்டாக புகார் கொடுத்ததாகவும், தங்கத்தை மீட்ட ஏ.சி. அதனை பார்ட்டிக்கு கொடுக்காமல் அப்படியே அமுக்கிக் கொண்டதாகவும் உளவுத்துறை குறிப்புகள் கூறுகின்றன. தீர விசாரித்து நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?