Skip to main content

'அந்த விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது'-முதல்வர் கடும் தாக்கு  

Published on 04/12/2024 | Edited on 04/12/2024
mk.stalin speech in chennai

வடசென்னையில் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 79 புதிய திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, 29 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்து மேடையில் உரையாற்றினார்.

அவருடைய உரையில், ''கடந்த காலங்களில் மழை வெள்ளத்தில் தவிக்கக்கூடிய சென்னையை மீட்டெடுத்த மாதிரி மற்றப் பகுதிகளையும் விரைவாக மீட்டு எடுப்போம். சில மாவட்டங்கள் முழுமையாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. அல்லல் படக்கூடிய மக்களுடைய வேதனைகளை அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்கள். கடந்த ஆட்சியில், அது எந்த ஆட்சி என உங்களுக்கு தெரியும். 2015 ஆம் ஆண்டு செயற்கை வெள்ளத்திலும், பல்வேறு புயல்களிலும் சென்னையை வெள்ளத்தில் மிதக்கவிட்ட மாதிரி நாம் இப்பொழுது தவிக்க விடவில்லை.

ஃபெங்கல் புயலுக்காக நாம் எடுத்த நடவடிக்கைகளும் பணிகளும் தான் அதற்கு சாட்சி. முன்பெல்லாம் சென்னையில் மழை பெய்தால் உதவி கேட்டு அல்லாடுகின்ற நிலையும், தன்னார்வலர்களிடம் உதவி கேட்டு சோசியல் மீடியாக்களில் பதிவிடுகின்ற நிலையும், எப்பொழுது வெள்ளம் வடியும் என காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது. ஆட்சியாளர்களை களத்தில் பார்க்கவே முடியாது. அப்படியே வந்தாலும் என்ன பிரச்சனை என்று தெரியாமல் 'வாக்காளர் பெருமக்களே' என பேசுவார்கள். மீடியாக்கள் மைக்கை கொண்டு போய் நீட்டினால் பதில் சொல்லாமல் 'ப்ளீஸ் விட்டு விடுங்கள்' என சொல்வார்கள். அப்படித்தான் கடந்த கால ஆட்சியில் இருந்தார்கள்.

தன்னார்வலர்கள் உதவி செய்ய வந்தால் அவர்களை மிரட்டுவார்கள். அவர்கள் வழங்கக்கூடிய நிவாரணப் பொருட்கள் மீது ஸ்டிக்கரை ஒட்டுவார்கள். அந்த காலம் எல்லாம் இப்போ மலையேறி போச்சு. நாம் எடுத்த நடவடிக்கையால் சென்னையில் மழை பொழிந்த அடுத்த நாளே மீண்டிருக்கிறது. மழை நின்ற உடனே சென்னை கொளத்தூர் தொகுதியை பார்வையிட்ட பொழுது அங்கிருந்த ஒரு பெரியவர் சொன்னார் 'முதல் முறையாக தில்லைநகர், வீனஸ் நகர், செந்தில் நகர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் வரவில்லை. இந்த நகருக்கு விடிவு காலம் பிறந்து இருக்கு' என சொன்னார்.

விடியலை தருவது தான் உதயசூரியன். ஆனால் உதயசூரியினால் கண் கூசுகின்ற ஆட்களுக்கு விடியல் தெரியாது. விடியலை விடியா ஆட்சி என சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளிய அந்த விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது. அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. அதேபோல் குளத்தூர் தொகுதியைச் சேர்ந்த இன்னொருவர் என்னிடம் சொன்னார் 'உங்களுடைய பணிகள் எல்லாம் வரலாற்றில் சிறப்பான இடத்தை பெறும்' என்று சொன்னார். அப்போது அருகில் இருந்த அமைச்சர் சேகர்பாபு என்னிடத்தில் சொன்னார். 'அண்ணே இவர் யார் தெரியுமா? கம்ப்ளைன்ட் பார்ட்டி என்று சொல்வார்கள். அவருக்கு கம்பிளைன்ட் பார்ட்டி என்ற பெயர் உண்டு. எப்ப பார்த்தாலும் நாங்கள் போகும்போதெல்லாம் கம்ப்ளைன்ட் கொடுத்துக் கொண்டே இருப்பார்' என்றார். உடனே நான் சொன்னேன், புகார் கொடுப்பவர்களுக்கும் நாம் பணிகளை செய்வோம். நம்மைப் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கும் பணிகளை செய்வோம். ஓட்டு போட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல ஓட்டு போட மறந்தவர்களுக்கும் நாம் நன்மை செய்வோம். இதுதான் உண்மையான பாராட்டு. இந்த பாராட்டுக்கள் தான் எதிர்க்கட்சியை வயிறெரிய வைத்திருக்கிறது. ஏனென்றால் எவ்வளவு மழை பெய்தாலும் முதலமைச்சர் தொடங்கி துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என எல்லோரும் களத்தில் வந்து நிற்கிறார்கள். நிவாரண உதவிகளை செய்கிறார்கள். நம்மால் அரசியல் செய்ய முடியவில்லையே என தவிர்க்கிறார்கள்''என்றார்.

சார்ந்த செய்திகள்