இந்த வருடம் தென்மேற்குப் பருவக்காற்று முன்னதாக மே 15 அன்று துவங்கும் என்று அறிவித்தது வானிலை ஆராய்ச்சி மையம். ஆனாலும் மே மாத பிற்பகுதியில் தென்காசி மாவட்டத்தின் அருவிகளின் நகரமான குற்றாலத்தில் இதமான தென்றல் காற்று மட்டும் வீசிவிட்டுப் போனது. தென்மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளாவில் மழை சீஸனும் காணப்படவில்லை. மாறாக சாரல் மழை மட்டுமே பெய்தது. வழக்கமான பருவமழை கேரளாவில் மிஸ்ஸிங்.
ஆண்டு தோறும் மிஞ்சிப் போனால் மே அல்லது ஜூன் மத்திய மாதத்திற்குள் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்குவதன் மூலம் குற்றால மலைகளில் இதமான சாரல் மழை பொழியத் துவங்கும் அதன் காரணமாக குற்றாலப் பகுதிகளின் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். சீஸன் காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரிக்கும்.
ஆயினும் இந்த வருடம் மே, ஜூன் இரண்டு மாதங்கள் வெறுமனே கழிந்துவிட்டன. இருப்பதோ ஜூலை மற்றும் ஆகஸ்ட் பாதி என ஒன்றரை மாதம் மட்டுமே. ஆனால் சீஸனுக்கான அறிகுறிகள் தென்படாமல் வெயில் மட்டும் கனஜோராக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாகக் குற்றாலப் பகுதிகளின் இதமான சீதோஷ்ணச் சூழல் நிலவிய நேரத்தில் நேற்றையதினம் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிமாகிக் கொட்டத் துவங்கியது. மெயின் அருவி, ஐந்தருவி, புலிஅருவி, சிற்றருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் திடீரென்று தண்ணீர் கொட்ட தொடங்கியது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மெயினருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆயினும் ஆண்கள் பகுதியில் மட்டும் ஓரத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
திடீர்மழை திடீரென அருவிகளில் தண்ணீர் கொட்டியது ஒருவகையில் சீஸன் சூழலை வெளிப்படுத்தினாலும் நேற்றைய தினம் சுற்றுலா பயணிகளின் வருகை சுமாராகவே காணப்பட்டது.