7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் ஒருமாத காலம் ஆகியும் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன்? அதனை தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஏன்? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த மாதம் 6ந் தேதி, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரையும், சட்டப் பிரிவு 161ன்கீழ் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பளித்து, இவர்களின் விடுதலையைத் தடுத்த வழக்கை முடித்துவைத்தது, நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு.
மறுநாளே, தமிழ்நாடு அமைச்சரவை கூடி, சட்டப் பிரிவு 161ன்கீழ் அவர்களை விடுவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் ஒரு மாத காலமாகிறது; அத்தீர்மானத்தில் ஆளுநர் இன்னும் கையெழுத்திடவில்லை. 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் ஒருமாத காலம் ஆகியும் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன்? அதனை தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஏன்?
28 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருப்பவர்கள்; தீர்மானத்தைப் பெற்ற மறு நிமிடமே அதில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் ஆளுநர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
அதனால் அவர் கையெழுத்திட வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தன. அப்போதும் அவர் கையெழுத்திடவில்லை.
இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளுநரை நேரில் சந்தித்து அவர்களை விடுவிக்கக் கேட்டுக்கொண்டார். அப்போது “பரிசீலிக்கிறேன்” என்று பதிலளித்தார். அவர் அப்படி பரிசீலித்தாரோ என்னவோ தெரியவில்லை; ஆனால் இன்னும் எழுவரையும் விடுவிக்கும் தீர்மானத்தில் மட்டும் கையெழுத்திடவே இல்லை.
இப்படியிருக்கையில், தமிழ்நாடு அரசும், எழுவர் விடுதலைத் தீர்மானத்தைப் பற்றியோ ஆளுநர் அதில் கையெழுத்திடாதது பற்றியோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதே சமயம், அதிமுக அரசின் நடவடிக்கைகள் மற்றும் இதர நிகழ்வுகளைப் பார்த்தால், எழுவர் விடுதலை விடயத்தை மடைமாற்றவும் அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும்தானோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன.
2009ல் நடந்த தமிழீழ இனப்படுகொலைக்கு திமுக-காங்கிரசைக் கண்டித்து இப்போது அதிமுக நடத்தும் கண்டனக்கூட்டம், தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம், மேலும் 4 எம்எல்ஏக்களின் பதவியைப் பறிக்கும் திட்டம் ஆகிய இவையெல்லாம், சட்டப்பிரிவு 161ன்கீழ் எழுவர் விடுதலையைப் பின்னுக்குத் தள்ளவே கிளப்பப்படுகின்றன என்று சொன்னால் அதை மறுக்க முடியுமா?
வேண்டுமென்றே, 7 பேரின் விடுதலை விடயத்தில் அரங்கேற்றப்படும் கயமைத்தனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
ஆளுநர் இதில், “பரிசீலிக்கிறேன்” என்று சொல்வதே கூட சட்டவிரோதமாகும்; ஏனென்றால், அரசமைப்புச் சட்டப்படி அமைச்சரவையின் பிரதிநிதிதான் ஆளுநர் என்பவர். அவருக்கென்று மாற்று எண்ணம் கிடையாது, கூடாது. ஆகவேதான் சட்டப்பிரிவு 161ன்கீழ் எழுவரையும் விடுவிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் அவர் காலங்கடத்துவதை அனுமதிக்க முடியாது.
எனவே சட்டப்படி, அடுத்த தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி உடனடியாக ஆளுநரிடம் கையெழுத்துப் பெறுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக அக்கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.