![The success of the effort ... We lost our homes in the gaja storm that day ... Today I am a doctor!](http://image.nakkheeran.in/cdn/farfuture/UIy93QLi60rpxcCX8RuO0CBe4TNo7RgdpRUeK2OB8yw/1605880974/sites/default/files/inline-images/dreyryr.jpg)
கடந்த 2018ஆம் ஆண்டு, தன்னுடைய கோரத்தாண்டவத்தைக் காட்டிச் சென்ற 'கஜா' புயல், பல கடலோர மாவட்டங்களில் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி பாரபட்சமில்லாமல் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. அது புரட்டிப் போட்டது, உடைமைகளை மாத்திரம் அல்ல, பலரது வாழ்க்கையையும் தான். அந்தக் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, தனக்கென்று இருந்த ஒரு சிறிய குடிசையையும் இழந்த நிலையில், தன்னுடைய விடா முயற்சியால் இன்று மருத்துவம் பயில வந்திருக்கும் அரசுப் பள்ளி மாணவி, சஹானாவை நேரில் சந்தித்தோம்.
மிகவும் எளிமையாக, கண்ணில் அந்த ஏழ்மையின் அடையாளத்தோடு, திருச்சி கி.ஆ.பெ மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்த மாணவியிடம் பேசுகையில். ''எங்களுடைய சொந்த ஊா் தஞ்சைக்கு அருகில், பேராவூரணி வட்டத்தில் உள்ள, பூக்கொள்ளை கிராமம். என்னுடைய அப்பா கணேசன், அம்மா சித்ரா. வயலில் தங்கி நிலங்களை பராமரிக்கும் கூலித் தொழில் செய்து வருகிறார்கள். வீட்டில் மின்சார வசதி இல்லை, அதனால் பள்ளியிலேயே தங்கி படித்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டிற்குத் திரும்பி வருவேன். கடந்த 2018 -ஆம் வருடம், இதே நவம்பா் மாதத்தில், எங்களுடைய வாழ்க்கையை மாற்றிய, அந்த 'கஜா' புயலால் எங்களுடைய வீடு இருந்த இடம் தெரியாமல் போனது.
பல மாதங்கள் கஷ்டப்பட்டோம், தங்குவதற்கு வீடு இல்லாமல் பள்ளிகளில் தங்கினோம். பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு, 12ஆம் வகுப்பை முடித்தேன். என்னுடைய முயற்சிக்கும், என் குடும்பத்தின் தியாகத்திற்கும், 12ஆம் வகுப்பில், 600க்கு 524 மதிப்பெண்கள் எடுத்தேன். ஆனால், தொடா்ந்து படிக்கவோ, அல்லது நீட் தோ்விற்குத் தயார் செய்யவோ, எனக்குப் போதிய வசதி இல்லை. இந்தச் செய்தியை அறிந்த நடிகா் சிவகார்த்திகேயன், எனக்குப் படிக்க உதவி செய்தார்.
நீட் தோ்விற்குப் பயிற்சி வகுப்புக்குச் சென்று படித்தேன். மொத்தம், 720 மதிப்பெண்ணுக்கு 273 மதிப்பெண் எடுத்தேன். எனக்கு, அரசு மருத்துவக் கல்லூரியில், படிக்க வாய்ப்பு கிடைத்தது. இன்று, கல்லூரியில் அட்மிஷனுக்கு வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு உதவி செய்த நடிகா் சிவகார்த்திகேயன் சாருக்கும், அவா் எனக்கு உதவுவதற்குக் காரணமாக இருந்த செய்தியாளா்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு நெகிழ்ச்சியுடன் கூறினார்.