தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பள்ளிகளிலேயே விளையாட்டு மாணவர்களைத் தேர்வு செய்து தனி விடுதிகளில் தங்க வைத்து சத்தான உணவுகள் வழங்கி விளையாட்டு பயிற்சிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதே போல் ஒவ்வொரு விளையாட்டு மாணவருக்கும் உடல் திறனை வளர்த்துக் கொள்ளச் சத்தான உணவுகள், பயிற்சிகள் வழங்கக் கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இதில் பேட்மிட்டன், சைக்கிளிங், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளின் தேர்வாகி உள்ள 82 பள்ளி மாணவ, மாணவிகளைத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை நிலை விளையாட்டு மையம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர் கிராமத்தில் உள்ள விடுதிகளில் தனித்தனியாகத் தங்க வைத்து விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, கல்வி கற்றும் வருகின்றனர்.
ஆனால் இந்த விடுதியில் தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின்படி விளையாட்டு மாணவ, மாணவிகளுக்கான சத்துணவுகள், புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் வழங்கப்படாமல் உள்ளதால் இதுவரை சைக்கிளிங் பயிற்சியில் இருந்த 3 மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். மேலும் பல மாணவர்களும் விளையாட்டு பயிற்சி முடித்து அரைகுறை சாப்பாட்டோடு தூங்க முடியவில்லை, புரதச் சத்து கிடைக்காமல் விளையாட்டு பயிற்சியும் பெற முடியவில்லை அதனால் எங்களையும் வீட்டிற்கே அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி கண்கலங்குவதைப் பார்த்து மேலும் பல மாணவர்களையும் பெற்றோர்கள் விடுதியில் இருந்து அழைத்துச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்காக விடுதி மாணவ, மாணவிகள் சொந்த ஊர்களுக்குச் சென்று நேற்று(3.11.2024) மாலையில் இருந்து பெற்றோர்களுடன் விடுதிக்கு திரும்பியுள்ளனர். ஆனால், இன்று காலை 9.30 மணி வரை எந்த விடுதிக்கும் மேலாளர், வார்டன் என யாருமே வராததால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இரவில் இருந்தே காத்திருந்தனர். அதே போல மாணவர்கள் விடுதியில் மாணவர்கள் ஊருக்குப் போன பிறகு அவர்களின் உடைமைகளை ஒரே அறையில் குப்பைகளைப் போல ஒன்றாகக் கொட்டி குவித்து வைத்துள்ளதால் பலரது உடைமைகள் காணவில்லை, நோட்டு, புத்தகங்கள், சான்றிதழ்கள், உடைகளில் எண்ணெய், தண்ணீர் ஊற்றி நாசமாகிவிட்டது. இதனால் புதிய நோட்டுகள் வாங்க வேண்டியுள்ளது என்கின்றனர் மாணவர்கள்.
தமிழ்நாட்டில் அதிகமான விளையாட்டு வீரரகளை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து செயல்பட்டு வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் உள்ள விளையாட்டுத் துறையில் ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தாலும், மெத்தனப் போக்காலும் பல நல்ல விளையாட்டு வீரர்கள் உருவாதை தடுத்து வருகின்றனர் என்கின்றனர் பெற்றோர்கள்.
துறை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கும் முழு நிதியும் மாணவர்களுக்காக செலவிட்டு சத்தான புரதச்சத்து உணவுகள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யாவிட்டால் தற்போது வெளியேறிய 3 விளையாட்டு மாணவர்களைப் போல மேலும் பல விளையாட்டு மாணவர்கள் வெளியேறிவிடுவார்கள் என வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.