Skip to main content

நிலத்தடி நீரை பாதுகாக்க... உண்டியல் சேமிப்பை அள்ளிக் கொடுத்த மாணவர்கள்...

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து ஆயிரம் அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைத்தும் தண்ணீர் கிடைக்காத அவல நிலை உருவாகிவிட்டது. அதனால் கீரமங்கலம் தொடங்கி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்க சொந்த செலவில் காட்டாறுகளில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை சீரமைத்து குளங்களை தூர்வாரி வருகின்றனர். அதனால் பருவ மழை பெய்யும் போது மழைத் தண்ணீர் வீணாகாமல் வாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு சென்று தேங்கினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் உள்ளது.
 

pudukottai

 

 

கீரமங்கலத்தில் தொடங்கிய பணி படிப்படியாக அடுத்தடுத்த கிராம இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் கொத்தமங்கலத்தில் ஆயிரம் அடி ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் இல்லை என்பதை நேரடியாக உணர்ந்த இளைஞர்கள் முன்னால் முதலமைச்சர் காமராஜர் கட்டிய அணைக்கட்டில் இருந்து அந்தப் பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று சேமிக்கும் முயற்சியில் இளைஞர்கள் இறங்கினார்கள். தங்கள் சொந்த செலவில் சீரமைப்பு பணிகைளை தொடங்கி செய்து வருகின்றனர். இளைஞர்களின் இந்த பணியை பார்த்து வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களும் உள்ளூரில் உள்ள பலரும் பொருளாதார உதவிகள் மற்றும் வாகன உதவிகள் செய்து வருகின்றனர்.
 

இந்த நிலையில் இளைஞர்களின் குளம் சீரமைப்புப் பணிக்காக சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்த ராஜம்மாள் (54) என்ற பெண் தான் நூறு நாள் வேலை செய்து சேமித்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை இளைஞர்களிடம் வழங்கினார்.
 

இந்த நிலையில் கொத்தமங்கலம் மையம் திருஞானம் - வசந்தி தம்பதிகளின் மகன் சக்திவேல் ( 5 ம் வகுப்பு மாணவன் ) தான் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்திருந்த உண்டியலை குளம் சீரமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர்களை வீட்டிற்று அழைத்து கொடுத்தான். அதே இடத்தில் உண்டியலை உடைத்து எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ. 2 ஆயிரத்தில் 368 ரூபாய் இருந்தது. 
 

pudukottai

 

 

அதே போல அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் - லதா தம்பதிகளின் மகள் அனுஷ்கா ( 4 ம் வகுப்பு மாணவி ) பெற்றோர்கள் தனக்கு கொடுத்த காசை சேமித்து வைத்திருந்த உண்டியலை இளைஞர்களிடம் வழங்கினார். அந்த உண்டியலும் அதே இடத்தில் பிரித்து எண்ணப்பட்டது. அதில் ரூ 2 ஆயிரத்தி 313 ரூபாய் இருந்தது. அதே போல மாணவன் தமிழழகன் தனது செலவுக்காக பெற்றோர் கொடுத்த ரூ. 500 ஐ நிலத்தடி நீர் பாதுகாப்பு சீரமைப்புக் குழுவிடம் வழங்கினார். இப்படி மாணவ மாணவிகளும் நிலத்தடி நீரை பாதுகாக்க தங்களின் உண்டியல் சேமிப்பை வழங்கி இருப்பது அனைவராலும் பாராட்டப்பட்டது.
 

 இது குறித்து அந்த மாணவர்கள் கூறும்போது.. இப்ப எல்லாம் தண்ணீர் கிடைக்கல. அதனால நிலத்தடி நீரை சேமிச்சா தான் எங்க காலத்தில் தண்ணீர் கிடைக்கும். இப்ப எங்க ஊர்ல குளம் வாய்க்கால்களை வெட்டி சுத்தம் செய்றாங்க. இனி மழை பெய்தால் தண்ணீர் தேங்கும். அதனால தான் எங்க வீட்ல எங்களுக்கு பள்ளிக்கு போகும் போதும் சொந்தக்காரங்க கொடுத்த பணத்தையும் உண்டியல்ல சேமித்து வைத்திருந்த பணத்தை நிலத்தடி நீர், நீர்நிலை பாதுகாப்புக்காக கொடுத்திருக்கிறோம். தண்ணீரை சேமிக்க எங்கள் கையில் இருந்ததை கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
 

 இது குறித்து கொத்தமங்கலம் நிலத்தடி நீர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறும் போது, வேலை தொடங்கும் போது பணம் கிடைக்காமல் வேலை பாதியில் நின்று விடுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் பணி தொடங்கியதும் பொருளாதார உதவி மற்றும் வாகன உதவி என்று அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்கிறார்கள். இப்போது நூறு நாள் வேலை செய்து செமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்த ராஜாம்மாள் பள்ளி சிறுவர்கள் உண்டியல் பணத்தையும் கொடுத்திருப்பது ரொம்ப நிறைவாக உள்ளது. 
 

 அதனால பணம் இல்லை என்று தாமதிக்காமல் அடுத்தடுத்த கிராமங்களிலும் நிலத்தடி நீர் பாதுகாப்பு பணியை இளைஞர்கள் தொடங்க வேண்டும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்