
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். திட்டத்தின் படி ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ம் தேதி பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சுமார் 9 மாதங்களாக இருவரும் விண்வெளியில் தங்கினர். பல்வேறு இடையூறுகள் மற்றும் தாமதங்களுக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் நேற்று காலை இந்திய நேரப்படி 10:35 மணிக்கு தன்னுடைய பூமியை நோக்கிய பயணத்தை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் தொடங்கினர். இன்று அதிகாலை 3:27 மணிக்கு அவர்கள் பயணித்த விண்கலம் ஃப்ளோரிடாவில் கடற்பரப்பில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

திட்டமிட்டபடியே 17 மணி நேரப் பயணத்திற்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் ஃப்ளோரிடா கடற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பின்னர் கடலில் விழுந்த டிராகன் கேப்சூலை படகு மூலம் மீட்டு அதிலிருந்த விண்வெளி வீரர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்துச் சென்றது ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா ஆராய்ச்சிக் குழு. சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமி திரும்பிய நிலையில் இந்திய வம்சாவளியான அவருடைய சொந்த பூர்வீக ஊரான குஜராத்தின் மேக்சனாவில் ஊர் மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.