தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சங்கத்துடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்குப் பணி வழங்கக் கோரியும், அரசாணை எண் 149ஐ ரத்து செய்யக் கோரியும் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து இன்று அதிகாலை டிபிஐ அலுவலகத்திற்கு வந்த 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பிரதான கோரிக்கையான அரசாணை எண் 149ஐ ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ள உள்ளதாகப் போராட்டக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.