தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளைக் கொன்ற மத்திய மந்திரி மகனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த 10 லட்சம் நெல் மூட்டை, நெல் மணிகளை அரசு உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் முதல் நாளான நேற்று திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அவருடைய வீட்டில் உண்ணாவிரதத்தைத் தொடங்கி உள்ளனர். டெல்லியில் சென்று தங்களுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நாற்பத்தி ஆறு நாட்கள் இந்த உண்ணாவிரதம் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.