விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகில் உள்ள கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு மினி லாரி வந்துள்ளது. அந்த லாரியைச் சோதனை இடுவதற்காகத் தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. இதைக் கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் அந்த மினி லாரியை துரத்திச் சென்று குடுமியான் குப்பம் அருகே மடக்கினர். ஆனால் தாறுமாறாக ஓடிய அந்த மினி லாரி சாலையோர பள்ளத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிலிருந்து லாரி டிரைவர் உட்பட இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் லாரியை சோதனை செய்ததில் 180 மில்லி அளவு கொண்ட போலி மது பாட்டில்கள் 155 அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு இருந்தன. அதிலிருந்த பாட்டில்களின் எண்ணிக்கை 7,440 என தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் எட்டு லட்ச ரூபாய் என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மினி லாரியை விபத்துக்குள்ளாக்கிவிட்டு அதிலிருந்து தப்பி ஓடிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். புதுச்சேரியிலிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மது கடத்தல் தொடர்ந்து கொண்டே உள்ளது. போலீசாரும், அவர்களைத் துரத்தி மடக்கிப் பிடித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை எனச் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.