
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதேபோல், 90%- க்கும் மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதற்கடுத்து அ.தி.மு.க, பா.ஜ.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் குறிப்பிடத் தகுந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜனநாயக முறையில் மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒற்றை வாக்கும் வெற்றி, தோல்விகளை நிர்ணயித்திருக்கிறது இத்தேர்தலில். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒற்றை வாக்கு ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியின் 9-வது வார்டில் ம.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி ராஜை விட, அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்செல்வன் ஒரு வாக்கு அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார். தமிழ்செல்வன் 297 வாக்குகளும், அந்தோணி ராஜ் 296 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியின் 8- வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளர் உமா ஒரு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கீர்த்தனாவைத் தோற்கடித்தார். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியின் 7- வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராஹிம் ஷா ஒரு வாக்குகூட பெறவில்லை. இந்த வார்டில் பிரித்வி ராஜா என்ற சுயேச்சை வேட்பாளர், 175 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அடுத்த இடத்தில் தி.மு.க. வேட்பாளர் 149 வாக்குகளைப் பெற்றார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பேரூராட்சியின் 11- வது வார்டில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நரேந்திரன் ஒரு வாக்கு மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். இங்கு தி.மு.க. வேட்பாளர் உமா சங்கர் 84 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மதுரை மாவட்டம், மேலூரில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப்பை அகற்றக் கோரி பா.ஜ.க.வின் முகவர் கிரிநந்தன் பிரச்சனை கிளப்பிய 8- வது வார்டில் அந்த கட்சி வேட்பாளர் அம்சவேணி 10 வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்த வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முகமது யாசின் 651 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஹிஜாப் சர்ச்சையை ஏற்படுத்திய கிரிநந்தன் பா.ஜ.க. வேட்பாளர் அம்சவேணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியின் 19- வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நவாஸ் 146 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் முகமது உசேன் 145 வாக்குகளும் பெற்றதையடுத்து, தி.மு.க. வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருச்சி மாவட்டம், கூத்தைப்பார் பேரூராட்சியின் 7- வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நித்யா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் 244 வாக்குகள் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கர்ணன் 243 வாக்குகள் பெற்று ஒரு வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
திருவாரூர் மாவட்டம், பேரளம் பேரூராட்சியின் 8- வது வார்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் 3 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒரு வாக்கு பெற்றார். கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியின் 3- வது வார்டில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் கோபிநாத் தி.மு.க. வேட்பாளரை விட ஒரே ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.