![Single contest in urban local body elections: Democratic Party of India announcement!](http://image.nakkheeran.in/cdn/farfuture/b31GGcKMkG-bDZYaetbIibiv1veohqrQks1mMCh9yxQ/1643443144/sites/default/files/inline-images/ravi%20444.jpg)
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், சென்னை அசோக்நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சித் தனித்துப் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயகக் கட்சிப் போட்டியிடாத இடங்களில் யாருக்கும் ஆதரவு இல்லை. மக்களின் செல்வாக்குடன் போட்டியிடுகிறோம்; பல்வேறு துறைகளில் மக்களுக்கு தேவையானதை செய்கிறோம். அனைத்து மக்களுக்கும், அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் நோக்கம். இந்த கட்சி ஒரு காலத்தில் இந்தியாவை ஆளும். யாரையும் குறை சொல்லி அரசியல் செய்யும் கட்சி இந்திய ஜனநாயகக் கட்சி இல்லை" எனத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்திய ஜனநாயகக் கட்சித் தேர்தலைச் சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.